போதையில் சீரழியும் தமிழகம்... 17,500 போதை மாத்திரைகள் பறிமுதல்... திருச்சி தான் டார்கெட்.. 40 நாட்களில் 3 பேர் பலி!
தமிழகம் போதைப்பழக்கத்தால் சீரழிந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி தான் இவர்களுக்கு டார்கெட். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளையும் இவர்கள் விட்டு வைப்பதில்லை. கடந்த 40 நாட்களில் 3 பேர் போதைப் பழக்கத்தால் உயிரிழந்துள்ளனர். திருச்சி பெரியகடை வீதி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17,500 போதை மாத்திரைகளை விசேஷப் படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சியில் கடந்த சில வாரங்களாகப் போதை கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பெரியகடை பகுதியில் உள்ள ஒரு வீட்டை மையமாகக் கொண்டு சட்டவிரோதப் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகள் கடத்தப்பட்டு, இளைஞர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக மாநகரக் காவல் ஆணையருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தனிப்படை போலீஸார் குறிப்பிட்ட அந்த வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ரகசிய அறைகளில் மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17,500 போதை மாத்திரைகளை போலீஸார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

போதை மாத்திரைகள் மட்டுமின்றி, அந்த வீட்டில் குற்றச் செயல்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 பட்டாக்கத்திகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 4 அதிநவீன செல்போன்களையும் போலீஸார் கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பாகப் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த கணேஷ் பாண்டியன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரைப் போலீஸார் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இந்த கும்பலின் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி மாநகரப் பகுதியில் கடந்த 40 நாட்களில் மட்டும், வீரியம் மிக்க போதை மருந்துகளை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தியதாகக் கூறப்படும் 3 இளைஞர்கள் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இளம் வயதினரின் உயிரைப் பறிக்கும் இந்த விபரீதப் போதை கலாச்சாரத்தைத் தடுத்து நிறுத்தக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்த இமாலய போதை மாத்திரை கடத்தல் கும்பல் பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கைதான இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் போலீஸார் திட்டமிட்டு வருகின்றனர்.
