நாகையில் ரூ.135 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - 4 பேர் கைது!

 
போதைப்பொருள் போதை கடத்தல்

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே ரூ.135 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரிடம் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் நூற்று முப்பத்து ஐந்து கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பூபாலன், சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள்

கைது செய்யப்பட்டவர்களிடம் நாகை சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து முப்பது மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் தொடர்ந்து துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். இவர்களில் பூபாலன் என்பவர் தவெக மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் வழக்கறிஞராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் காரைக்காலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்திற்கும் இந்த நாகை கடத்தல் வழக்குக்கும் இடையே ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

போதைப்பொருள்

பறிமுதல் செய்யப்பட்ட நூற்று முப்பத்து ஐந்து கிலோ போதைப்பொருள் ஐந்து தகரப் பெட்டிகளில் வைக்கப்பட்டுப் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காரும் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கத்துறை அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, கடத்தலுக்கான திட்டமிடல் எங்கு நடைபெற்றது, இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.