ரூ.14,799 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு - டெல்லியில் போலீசார் அதிரடி!

 
டெல்லி போதை

இந்தியத் தலைநகர் டெல்லியில், போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையின் முக்கிய அங்கமாக, காவல்துறையால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.897 கோடி சர்வதேச சந்தை மதிப்புள்ள 1,450 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.

டெல்லி ஜி.டி.கர்னால் சாலையில் அமைந்துள்ள கழிவு அகற்றும் மையத்தில், குற்றப்பிரிவு சிறப்பு காவல் ஆணையர் எச்.ஜி.எஸ்.தலிவால் மற்றும் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் இந்த 10-வது மாபெரும் போதைப்பொருட்கள் அழிப்பு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது. காவல்துறையின் தகவலின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்ட போதைப்பொருட்களின் பட்டியலின்படி, மெத்தாபெட்டமைன்: 1,010 கிலோ, ஹெராயின்: 135 கிலோ, சாரஸ் : 62 கிலோ, கஞ்சா: 37 கிலோ, மெத்தாகுவாலோன் : 16 கிலோ, பாப்பி ஸ்ட்ரா : 91 கிலோ, பீனைல்ப்ரோபனோன்: 70 கிலோ, 15 லட்சத்திற்கும் அதிகமான ட்ரமாடோல் மாத்திரைகள் மற்றும் 36,000-க்கும் மேற்பட்ட கோடின் சிரப் பாட்டில்கள்.

போதைப்பொருள்

டெல்லி காவல்துறை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடத்தி வரும் தொடர் வேட்டையின் மூலம் அடைந்துள்ள பிரம்மாண்ட வெற்றியை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது. டிசம்பர் 2022 முதல் இதுவரை நடத்தப்பட்ட 10 அழிப்பு நடவடிக்கைகள் மூலம், சர்வதேச சந்தையில் சுமார் ரூ.14,799 கோடி மதிப்புள்ள 49,663 கிலோ போதைப்பொருட்களை டெல்லி காவல்துறை அழித்துள்ளது.

பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களைப் பாதுகாப்பாக அழிப்பது மட்டுமின்றி, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையுமே வேரோடு தகர்ப்பது தான் தங்களின் முதன்மை நோக்கம் என சிறப்பு காவல் ஆணையர் தலிவால் தெரிவித்துள்ளார்.