ரூ.43 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்... அசாமில் பரபரப்பு!
அசாம் மாநில எல்லைப் பகுதியில் தேசியப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மியான்மர் நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாகத் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து இச்சோதனை நடத்தப்பட்டது.
அசாம் எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த லாரியை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அந்த லாரியில் மியான்மரிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 54 கிலோ எடையுள்ள மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட இந்த அதிநவீன போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ. 43 கோடி ஆகும். இச்சம்பவத்தோடு தொடர்புடைய மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த சர்வதேசக் கடத்தல் கும்பலில் தொடர்புடைய பிற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
