அரசுப் பேருந்து முன் படுத்து போதை ஆசாமி அராஜகம் - எடப்பாடி பேருந்து நிலையத்தில் பரபரப்பு!

 
போதை

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில், மது போதையில் இருந்த நபர் ஒருவர் அரசுப் பேருந்தின் முன்பாகச் சாலையில் படுத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, அசுர போதையில் இருந்த பயணி ஒருவர் பேருந்தின் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்ய முயன்றுள்ளார்.

இதனைக் கவனித்த பேருந்தின் நடத்துனர், விபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற பாதுகாப்பு நோக்கில் அவரைப் படிக்கட்டில் அமரக் கூடாது என எச்சரித்துக் கண்டித்துள்ளார். மேலும், பேருந்தின் தானியங்கி கதவையும் மூடியுள்ளார்.

நடத்துனர் கண்டித்ததால் கடும் ஆத்திரமடைந்த அந்தப் போதை ஆசாமி, பேருந்திலிருந்து கீழே இறங்கி நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "படிக்கட்டுல உட்காந்தா தப்பா? ரூல்ஸ் இருக்கா இல்லையா?" என்று பொதுமக்களுக்கு இடையூறாகக் கூச்சலிட்டுக் ரகளையில் ஈடுபட்டார். அதோடு நிறுத்தாமல், பேருந்தை அங்கிருந்து நகர விடாமல் தடுக்கும் பொருட்டு, ஓடும் பேருந்தின் முன்பக்கச் சக்கரத்தின் அருகே சாலையில் நேராகப் படுத்துக்கொண்டு அடம் பிடிக்கத் தொடங்கினார்.

பேருந்து நிலையத்தின் முக்கியப் பாதையிலேயே அந்த நபர் படுத்துக் கொண்டு அராஜகம் செய்ததால், பேருந்து நிலையத்திற்குள் பிற வாகனங்கள் மற்றும் பேருந்துகள் வந்து செல்வதில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அரசுப் பேருந்து சரியான நேரத்திற்குப் புறப்பட முடியாமல் போனதால், அதிலிருந்த பயணிகள் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் நீண்ட நேரம் கடும் அவதிக்குள்ளாகினர். போதை ஆசாமியின் இந்த விபரீதச் செயலால் எடப்பாடி பேருந்து நிலைய வளாகமே சில மணி நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.