துபாய் விமான நிலையம் மூடல்... மறுஅறிவிப்பு வரையில் இயங்காது - வளைகுடா வான்பரப்பில் பதற்றம்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்திய 'Operation Lion's Roar' தாக்குதல் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக, வளைகுடா நாடுகளின் வான்பரப்பு முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக துபாய் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், நாட்டின் வான்பரப்பை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. இதனால் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் மார்ச் 1ம் தேதியான இன்று முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் ஆகிய இரண்டுமே மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன. பயணிகள் யாரும் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் மற்றும் பிளை துபாய் நிறுவனங்கள் தங்களது அனைத்துச் சேவைகளையும் ரத்து செய்துள்ளன. அபுதாபியின் சயீத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் இன்று (மார்ச் 1) மதியம் 2 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிலைமையைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். சவுதி அரேபியாவின் 'சவுதியா' நிறுவனம் குவைத், துபாய், அபுதாபி உட்பட 8 இடங்களுக்கான தனது சேவைகளை மார்ச் 2-ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது 'Truthful Promise 4' என்ற நடவடிக்கையின் மூலம் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைகளை வீசியுள்ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம், கத்தார் மற்றும் அமீரகத்தில் உள்ள ராணுவத் தளங்கள் ஈரானின் இலக்காகியுள்ளன.
இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் பொதுமக்களின் விமானப் போக்குவரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் தங்களது வான்பரப்பை மூடியுள்ளன
