விடுமுறைக்கு வந்த துபாய் இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை... கன்னியாகுமரியில் பயங்கரம்!
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக விடுமுறைக்கு ஊர் திரும்பிய இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் பணியாற்றி வந்த சமீம் என்பவர் சமீபத்தில் விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருந்தார்.

இந்நிலையில், திங்கள்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த சமீமை முன்விரோதம் காரணமாக ரவுடி முகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் வழிமறித்துப் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்க சமீம் ஓடியபோதும் விடாமல் துரத்திச் சென்ற கும்பல் சரமாரியாக வெட்டியதில், பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி முகேஷ் உள்ளிட்ட கும்பலைப் பிடிக்கத் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
