பிரபல மனித ரோபோவுக்கு துபாயில் வினோதத் திருமணம் ... வைரலாகும் பதிவு!
துபாயில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக வலம்வரும் பு சுனைதா என்ற ஹுமனாய்டு ரோபோவுக்கு அதே போன்ற மற்றொரு ரோபோவான மோசாவுடன் திருமணம் நடைபெற்றதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரேபிய பாரம்பரிய முறைப்படி மிகப்பிரமாண்டமாக நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளன. மனிதர்களின் கலாச்சார வழக்கங்களைப் பின்பற்றி நடைபெறும் இத்தகைய வினோதமான நிகழ்வுகள் தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் திருமண விழாவில் பு சுனைதா என்ற ரோபோவுக்கு வழக்கமான பாரம்பரிய உடையான கண்டூரா அணிவிக்கப்பட்டிருந்ததுடன், மணப்பெண்ணான மோசா என்ற ரோபோ பாரம்பரிய அபயா உடையை அணிந்திருந்தது. சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடப்பட்ட பதிவில், தாம் மிகவும் அழகிய ரோபோவான மோசாவைத் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் துறையின் வளர்ச்சியை மக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த விளம்பர நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வினோதத் திருமணக் காட்சிகளைப் பார்த்துப் பலரும் தங்களது கருத்துக்களை நகைச்சுவையுடன் பதிவிட்டு வருகின்றனர். மனிதர்களுக்கே உரிய திருமணச் சடங்குகளை ரோபோக்கள் செய்து கொள்வது போன்ற தோற்றத்தை உருவாக்கும் இந்த நவீன தொழில்நுட்ப முயற்சிகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
