இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - துரை வைகோ பேட்டி!

 
துரை வைகோ

தூத்துக்குடியில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, எதிர்வரும் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரசாரங்களின் போது அரசியல் தலைவர்கள் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தவெகவை விமர்சிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்திலும், ஆபாசமாகவும் பேசியது கண்டிக்கத்தக்கது என்று துரை வைகோ குறிப்பிட்டார். குறிப்பாக, அருகில் பெண் வேட்பாளரை வைத்துக் கொண்டு அவ்வாறு பேசுவது தமிழ்நாட்டு அரசியலுக்கும், அண்ணா தொடங்கிய திமுக இயக்கத்திற்கும் அழகல்ல என்று அவர் தெரிவித்தார்.

துரை விஜய் மதிமுக

தாராபுரம் பகுதியில் மக்கள் மத்தியில் நிலவும் சூழலின்படி, இடைத்தேர்தலில் திமுக மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டதாகவும், திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் தவெகவுக்கு வாக்களித்து விடாதீர்கள் என்று திமுகவினரே பிரசாரம் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

தவெக மற்றும் அதிமுகவுக்கிடையில்தான் போட்டி நிலவுவதாகவும், இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர், திமுக டெபாசிட் இழந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றார்.