செவிலியர் மாணவி மரணம் ஏற்க முடியாத குற்றம்... எம்.பி. துரை வைகோ கடும் கண்டனம்!
திருச்சி அரசு தலைமை பொது மருத்துவமனையில் மூக்கில் இருந்த சிறு கட்டியை அகற்றுவதற்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி சீதாலட்சுமி, அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமான் விடுதி பகுதியைச் சேர்ந்த விவசாயியின் மகளான இவர், அதே மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த இளம் பெண்ணின் எதிர்பாராத மரணம் அவரது குடும்பத்தினரிடமும், பொதுமக்களிடமும் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு முன்பாக மருத்துவர்கள் மயக்க மருந்து கொடுத்தபோது ஏற்பட்ட கவனக்குறைவால், மாணவியின் இதயத் துடிப்பும் நாடித்துடிப்பும் சீரிழந்து இந்த மரணம் சம்பவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனை நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியப் போக்கே இந்த உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் என்று மாணவியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் கவனக்குறைவால் ஏற்படும் உயிரிழப்பு என்பது சகித்துக் கொள்ள முடியாத குற்றம் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கவலை தெரிவித்துள்ளார்.
மறைந்த மாணவி சீதாலட்சுமியின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள துரை வைகோ, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும் மருத்துவமனை நிர்வாகமும் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் வருங்காலங்களில் இது போன்ற ஆபத்தான தவறுகள் மீண்டும் நிகழாத வண்ணம் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் ஒட்டுமொத்த மருத்துவப் பணியாளர்களும் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
