பிரச்சாரத்தின் போது பரபரப்பு... நடிகர் மன்சூர் அலிகான் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

 
மன்சூர் அலிகான் மன்சூர் அலிகான்

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் பிரபல நடிகர் மன்சூர் அலிகான், தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக லால்குடி தொகுதியில் மன்சூர் அலிகான் மிகவும் தீவிரமான மற்றும் வித்தியாசமான முறையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். ஊரணி பகுதியில் துணி துவைக்கும் பெண்களுக்கு உதவி செய்தபடியே வாக்குக் கேட்ட அவர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது மற்றும் வாழை, நெல் கொள்முதல் நிலையங்களை அமைப்பதே தனது லட்சியம் என்று பேசி வந்தார்.

பிரபல நடிகையின் சொத்து அபகரிப்பு!! மன்சூர் அலிகான் மீது வழக்கு!!

லால்குடி பகுதியில் பிரச்சாரத்தில் இருந்தபோது, அவருக்குத் திடீரென மயக்கம் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள், உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். அதிகப்படியான வெயில் மற்றும் ஓய்வில்லாத பிரச்சாரம் காரணமாக அவருக்குச் சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்சூர்

முன்னதாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும், அவர்கள் மறுத்ததால் தனித்துப் போட்டியிடுவதாகவும் மன்சூர் அலிகான் மனுத் தாக்கலின் போது தெரிவித்திருந்தார்.

மன்சூர் அலிகான் விரைவில் குணமடைந்து பிரச்சாரத்திற்குத் திரும்ப வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.