"திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளிடம் தலா ரூ. 5 லட்சம் லஞ்சம்" - கூட்டமைப்பு பகிரங்கக் குற்றச்சாட்டு!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்குத் தடையில்லா சான்றிதழ் வழங்குவதிலும், அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதிலும் பெருமளவில் முறைகேடுகளும் லஞ்ச வேட்டையும் நடந்ததாகத் தனியார் பள்ளி கூட்டமைப்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஆண்டு தோறும் கல்வித்துறையின் வாயிலாகக் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாக எழுந்துள்ள இந்த புகார், தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் பள்ளி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புகாரறிக்கையில், கடந்த திமுக ஆட்சியின் போது கல்வித்துறையில் நிலவியதாகக் கூறப்படும் முறைகேடுகள் அடுக்கப்பட்டுள்ளன. புதிய பள்ளிகளைத் தொடங்குவதற்கும், சிபிஎஸ்இ போன்ற பிற பாடத்திட்டங்களுக்கு மாறுவதற்கும் அவசியமான அரசின் தடையில்லா சான்றிதழைப் பெறுவதற்கே, பள்ளி ஒன்றுக்கு ரூ. 25 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளின் தரம் மற்றும் உள்கட்டமைப்பை ஆய்வு செய்து ஆண்டுதோறும் வழங்கப்படும் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1,000 தனியார் பள்ளிகளிடம் இருந்து தலா ரூ. 5 லட்சம் வரை கட்டாயமாக வசூலிக்கப்பட்டதாகக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கல்வி நிறுவனங்களை மிரட்டி, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் சுருட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தனியார் பள்ளி கூட்டமைப்பு, தற்பொழுது அமைந்துள்ள புதிய தவெக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் கல்வித்துறையின் உயர் மட்ட அதிகாரத்தில் இருந்து கொண்டு இந்த லஞ்ச வசூலுக்குத் துணைபோன அதிகாரிகள் மற்றும் அரசியல் புள்ளிகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
