"அம்மா ஜெயலலிதாவின் ஆட்சியில்..." - பிரதமர் மோடி உருக்கம்!
மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பேசினார். தமிழகத்தில் நிலவும் தற்போதைய சூழலை விமர்சித்த பிரதமர், ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார்.
"தமிழகத்தில் இன்று பெண்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஆனால், அம்மா ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. பெண்கள் தங்களது வாழ்க்கை எவ்வளவு சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் இருந்தது என்பதை இன்றும் நினைத்துப் பார்க்கிறார்கள்" என குறிப்பிட்ட பிரதமர் ஜெயலலிதாவிடம் ஊறிப்போயிருந்த தேசியப்பற்று மற்றும் தெளிவான சிந்தனைகளைத் தான் எப்போதும் மதிப்பதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் குறித்துப் பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார்: "போதைப்பொருள் மாஃபியாக்களால் தமிழகத்தின் இளம் தலைமுறை சீரழிக்கப்பட்டு வருகிறது. இதனால் தாய்மார்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். பல குடும்பங்கள் கண்முன்னே அழிந்து கொண்டிருக்கின்றன" எனக் குற்றம் சாட்டினார்.
"நான் உங்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், போதைப்பொருள் மாஃபியாக்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். தமிழகத்தில் மீண்டும் அமைதியும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்" என முழக்கமிட்டார்.

திமுக அரசு போதைப்பொருள் மாஃபியாக்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதாகச் சாடிய பிரதமர், மக்களின் உயிரையும் கண்ணியத்தையும் காப்பதை விடத் தனது குடும்ப நலனுக்கே திமுக முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரிவித்தார். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ள சூழலில், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதை மதுரையில் திரண்டுள்ள இந்தக் கூட்டம் நிரூபிப்பதாக அவர் கூறினார்.
