ஓடிக்கொண்டிருந்த போதே வெடித்து திடீரென தீப்பிடித்து எரிந்த மின்சார ஸ்கூட்டர் ... பரபரப்பு வீடியோ!
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கானகரில் பாபா ராம்தேவ் கோவில் அருகே ஓடிக்கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. திங்கள்கிழமை மாலை நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் இருந்தவர்கள் உடனடியாகக் கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚨 SRIGANGANAGAR, RAJASTHAN | ELECTRIC SCOOTER CATCHES FIRE WITH A BLAST
— contentkikamii (@contentkikamii) August 25, 2026
An electric scooter caught fire with a blast near Baba Ramdev Temple in Sriganganagar on Monday evening.
Two children narrowly escaped after the scooter suddenly caught fire. The rider jumped off the… pic.twitter.com/SvXHbfQIzD
பாபா ராம்தேவ் கோவில் அருகே மின்சார ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்தபோது அதிலிருந்து திடீரெனப் புகை வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அடுத்த சில நொடிகளில் பயங்கர சத்தத்துடன் வாகனம் தீப்பிடித்ததால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக ஸ்கூட்டரில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது ஸ்கூட்டரில் இருந்த குழந்தையும் அருகில் இருந்த மற்றொரு குழந்தையும் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். வாகனம் திடீரெனத் தீப்பிடித்ததால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கடுமையான பதற்றமடைந்துள்ளனர்.
ஸ்கூட்டர் தீப்பிடித்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிச் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. ஸ்கூட்டர் எந்தக் காரணத்தால் தீப்பிடித்தது என்பது உடனடியாகத் தெரியவராத நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமா என விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும் ஓடிக்கொண்டிருந்த மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்திருப்பது மின்சார வாகனங்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
