பயமில்ல... இ 20 பெட்ரோலை பயன்படுத்தலாம்... எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு!

 
e20

பெட்ரோலுடன் இருபது சதவீத எத்தனால் கலந்து விற்கப்படும் இ 20 எரிபொருளின் தரம் குறித்துப் பரவி வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை எனப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தீவிர பரிசோதனைகளில் எரிபொருளில் அதிகளவு ஈரப்பதம் அல்லது இரசாயனக் கலப்படம் இருப்பது கண்டறியப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையில் எரிபொருளின் தரம் தேசிய அளவில் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோலை முழு நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்; இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவாதம்

பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள், விநியோக மையங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுத் தரக் கட்டுப்பாடுகள் முழுமையாகப் பேணப்பட்டு வருகின்றன. சில இடங்களில் கண்டறியப்பட்ட மிகச் சிறிய அளவிலான குறைபாடுகள் உடனடியாகச் சரிசெய்யப்பட்டு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. இதன் காரணமாகப் பொதுமக்கள் எத்தகைய தயக்கமும் அச்சமும் இன்றி இந்த எரிபொருளைத் தங்களின் வாகனங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

E20 பெட்ரோலை பயன்படுத்திய வாகனங்களுக்கு பாதிப்பா? மத்திய அமைச்சர் விளக்கம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு இத்தகைய எரிபொருள் மாற்றங்கள் பெரிதும் உதவி புரிந்து வருகின்றன. வாகனங்களின் இன்ஜின் மற்றும் உதிரிபாகங்களைப் பாதிக்காத வகையில் அனைத்துத் தரமான பரிசோதனைகளும் முழுமையாக முடிக்கப்பட்ட பின்னரே எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் எவ்விதப் பயமும் இன்றி இந்த எரிபொருளை நம்பிக்கையுடன் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.