அதிகாலையில் சோகம்... மும்பையில் கனமழையால் அடுத்தடுத்து சரிந்து விழுந்த கட்டிடங்கள்; 6 பேர் பலி, ஒருவர் படுகாயம்!
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு இடையே, குடியிருப்பு கட்டிடங்கள் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மும்பையின் கிழக்கு புறநகர்ப் பகுதியான மான்குர்த் பகுதியில் உள்ள ஜனதா நகர் என்ற மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புப் பகுதியில், இன்று அதிகாலையில் அடுத்தடுத்து இருந்த 2 முதல் 3 கட்டிடங்கள் திடீரென நிலைகுலைந்து சீட்டுக்கட்டுகளைப் போல இடிந்து விழுந்தன. கட்டிடம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், கட்டிட இடிபாடுகளுக்குள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த குடியிருப்பாளர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்புப் படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றிப் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 6 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஒருவருக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மும்பையில் தற்போது பருவமழை தீவிரமடைந்து ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து நேரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பழமையான மற்றும் பலவீனமான கட்டிடங்கள் மழையினால் ஊறி இடிந்து விழுந்ததா அல்லது வேறு ஏதேனும் கட்டுமானக் குறைபாடுகள் காரணமா என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
