அதிகாலையிலேயே பரபரப்பு... "எலும்பை உடைப்பேன்" - முதல்வர் விஜய்யை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது!
தமிழக முதல்வர் விஜய்க்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து, ஒருமையில் பேசிய விவகாரத்தில் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜி.வி.மார்க்கண்டேயனை தூத்துக்குடி மாவட்டக் காவல்துறையினர் இன்றுஅதிகாலையில் கைது செய்துள்ளனர். அவரது இல்லத்திற்கே நேரடியாகச் சென்ற காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு, விசாரணைக்குப் பிறகு அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது அரசியல் நகர்வுகள் குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்போது, "சட்டசபைக்குப் பூட்டு போடுவேன் என்று கூறினால் எலும்புகளை உடைத்து விடுவேன்" என்ற தொனியில் ஒருமையில் பேசியதோடு, முதல்வர் விஜய்க்குப் பகிரங்க மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த உரையின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தப் பேச்சு தொடர்பாகத் தவெக மற்றும் காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில், வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி மாவட்டக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, விளாத்திகுளத்தில் உள்ள எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் வீட்டிற்கு இன்று அதிகாலையிலேயே நேரடியாகச் சென்ற தனிப்படை போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இச் சம்பவம் தூத்துக்குடி மாவட்ட திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
