அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.... இன்று மாலை திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம்... ‘அரோகரா’ முழக்கத்துடன் பக்தர்கள் பரவசம்!

 
பரணி தீபம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று (நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் கோயில் கருவறை முன்பு ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபத்தை ஏற்றியபோது, அங்குத் திரண்டிருந்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” எனப் பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் 10-ஆம் நாளான இன்று அதிகாலை 2 மணியளவில் அருணாச்சலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மூலவர் அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

பரணி

இறைவன் ஒருவனே (ஏகன்), அவனே பல வடிவங்களாக (அநேகன்) காட்சியளிக்கிறான் என்ற உயரிய தத்துவத்தை உணர்த்தும் வகையில், அதிகாலை 4 மணியளவில் கருவறை முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில் நெய் தீபம் ஏற்றப்பட்டு, அதிலிருந்து ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், அந்த தீபம் கோயில் பிரகாரங்களில் உள்ள சந்நிதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

க்ட்ஃப்க்

கோயிலில் ஏற்றப்பட்ட இந்தப் பரணி தீபமானது, மாலையில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படும். இன்று (நவம்பர் 24) மாலை சரியாக 6 மணியளவில் கோயில் கொடிமரம் அருகே பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, அர்த்தநாரீஸ்வரர் காட்சி கொடுத்ததும் மலை உச்சியில் உள்ள பிரம்மாண்டத் தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. மகா தீபத்தைத் தரிசிப்பதற்காகத் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.