நேபாளப் பெருவெள்ளத்திற்கு நிலநடுக்கமே காரணம் - 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கிப் பேரழிவு!
நேபாள நாட்டின் கோடாரி மற்றும் போதே கோஷி ஆற்றுப் படுகைப் பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த பனிப்பொழிவுச் சரிவுமே அந்நாட்டில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்திற்கு முதன்மைக் காரணம் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

திபெத் எல்லைக்கு அருகில் உள்ள கோடாரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தீவிரத்தால், பனிப்பாறைகள் சரிந்து விழுந்து அணைக்கட்டுகளாக இருந்த பனி ஏரிகள் அடுத்தடுத்து உடைந்தன. மலைப்பகுதியிலிருந்து சீறிப்பாய்ந்த பெருவெள்ளம் ரசுவா, தாடிங் மற்றும் நுவாகோட் ஆகிய மாவட்டங்களிலுள்ள 40-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களுக்குள் புகுந்தது. குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்கள், சாலைகள் மற்றும் நீர்மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 384-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நிலைமை தீவிரமடைந்துள்ளதால் நேபாள அரசு ராணுவ ஹெலிகாப்டர்களைக் கொண்டு வெள்ளத்தில் தவிப்பவர்களை மீட்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், நேபாளத்தைக் கடந்து இந்திய எல்லையான பீகார் மாநிலத்திற்கும் ஆற்றுநீர் பெருக்கெடுத்து வரும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
