அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் பீதி!
வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் நேற்று அடுத்தடுத்து லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ஒரே நாளில் பலமுறை நில அதிர்வுகள் உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங் பகுதியில் நேற்று இரண்டு முறை நில அதிர்வுகள் பதிவாகின. அதிகாலை 2:34 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆகப் பதிவானது. மதியம் 1:39 மணியளவில் அதே பகுதியில் மீண்டும் ஒரு லேசான அதிர்வு ஏற்பட்டு இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆகப் பதிவானது.

சிக்கிம் மாநிலத்தின் நம்சி பகுதியிலும் நேற்று மாலை 5:58 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 2.1 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் நேற்று காலை 9:30 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் லேசான அளவிலேயே இருந்ததால், உயிர் சேதமோ அல்லது பெரிய அளவிலான பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. இருப்பினும், இமயமலைப் பகுதியை ஒட்டியுள்ள இந்த மாநிலங்கள் அதிக நிலநடுக்க அபாயம் கொண்ட மண்டலத்தில் இருப்பதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
