டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டர் 5.9 ஆக பதிவு.. நள்ளிரவில் அலறியடித்தப்படி வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு சுமார் 9:42 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலஅதிர்வு சுமார் 10 முதல் 15 விநாடிகள் நீடித்ததாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவலின்படி, ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 150 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி ஆப்கானிஸ்தானில் இருந்தாலும், அதன் தாக்கம் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பல நகரங்களில் உணரப்பட்டது. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், லடாக், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி-என்சிஆர் (நொய்டா, குருகிராம், காசியாபாத்) ஆகிய இடங்களிலும், பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
டெல்லி மற்றும் ஜம்மு காஷ்மீரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், மின்விசிறிகள் மற்றும் விளக்குகள் ஆடுவதைக் கண்டு அச்சமடைந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால், தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தங்களின் குழந்தைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளிலும், பூங்காக்களிலும் தஞ்சம் புகுந்தனர். "கட்டில்கள் பயங்கரமாக ஆடியது, ஏதோ பெரிய அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று பயந்து விட்டோம்" எனப் பொதுமக்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தற்போதைய நிலவரப்படி, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான கட்டிடச் சேதங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இருப்பினும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீரின் மலைப்பாங்கான பகுதிகளில் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
