உத்தரகாண்டில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் - பாகேஷ்வர் பகுதியில் மக்கள் பீதி!
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஷ்வர் மாவட்டத்தில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
முதல் நிலநடுக்கம் நேற்று காலை 10:32 மணிக்கு ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவானது. இது நிலப்பரப்பிலிருந்து 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் சரியாக 14 நிமிடங்கள் கழித்து காலை 10:46 மணிக்கு ரிக்டர் அளவில் 2.6 ஆகப் பதிவானது. மூன்றாவது நிலநடுக்கம் மீண்டும் காலை 11:31 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவானது.

இந்த நிலநடுக்கங்கள் லேசானவை என்பதால், உயிரிழப்புகளோ அல்லது கட்டடங்கள் இடிந்து விழுந்தது போன்ற பெரிய அளவிலான சேதங்களோ ஏற்படவில்லை. இருப்பினும், அடுத்தடுத்து அதிர்வுகள் உணரப்பட்டதால் பாகேஷ்வர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

நேற்று லடாக் (4.2 ரிக்டர்) மற்றும் ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் (2.5 ரிக்டர்) பகுதிகளிலும் லேசான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இமயமலைப் பிராந்தியத்தில் நிலத்தடி தட்டுகளின் நகர்வு காரணமாகத் தொடர்ந்து இதுபோன்ற சிறிய ரக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
