ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் புல்லட் ரயில் சேவைகள் முடக்கம்!

 
நிலநடுக்கம் நிலநடுக்கம்

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று மாலை ரிக்டர் அளவில் 6.1 என பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நிலப்பரப்பு பயங்கரமாக குலுங்கியதுடன், கடலோரப் பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் பலமாக அசைந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து அலறியடித்தபடி திறந்தவெளியில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் உடனடியாக உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் சேவைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தண்டவாளங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதால், போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. மேலும் டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. அணுமின் நிலையங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நிலநடுக்கம்

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. கடல் நீர் மட்டம் திடீரென உயரக்கூடும் என்பதால் கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்திற்கு நில அதிர்வுகள் தொடர வாய்ப்புள்ளதால் ஜப்பான் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.