பயங்கர நிலநடுக்கம்...15 வீடுகள் தரைமட்டம்.. 2 பேர் பலி!
சீனாவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் அந்நாட்டின் பல பகுதிகளில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் மிகக் கடுமையாகக் குலுங்கின. இதனால் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் கடும் அச்சமடைந்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் வீரியம் காரணமாகப் பல பகுதிகளில் இருந்த 15-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து தரைமட்டமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக் கொண்டுள்ளதால் அவர்களைப் பத்திரமாக மீட்கும் பணியில் அந்நாட்டு மீட்புக் குழுவினர் தற்பொழுது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏராளமானோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
