அசுர வேகத்தில் பரவும் எபோலா வைரஸ்... பலி எண்ணிக்கை 139 ஆக உயர்வு!
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் கடந்த சில நாட்களாக 'எபோலா' வைரஸ் பாதிப்பு மிகவும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. தற்பொழுது அண்டை நாடான உகாண்டாவிற்கும் இந்த உயிர்க்கொல்லி நோய் பரவியுள்ள நிலையில், இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 139 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்பொழுது பரவி வரும் எபோலா வைரஸானது மிகவும் அரிதான 'பண்டிபுகியோ' என்ற புதிய வகையைச் சேர்ந்தது என்பதால், இதற்கு இன்னும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான மருத்துவச் சிகிச்சைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த புதிய தடுப்பூசியை முழுமையாகக் கண்டறிந்து பயன்பாட்டிற்குத் கொண்டு வருவதற்கு இன்னும் குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
காங்கோ நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள ஆயுதக் குழுக்களின் மோதல்கள் மற்றும் எல்லையோர மக்களின் அதிவேக இடப்பெயர்வுகள் காரணமாக இந்த நோய் மிக எளிதாகப் பரவி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் இதற்கான பாதிப்பு தற்பொழுது குறைவாகவே இருந்தாலும், ஆப்பிரிக்க பிராந்திய அளவில் இதன் ஆபத்து மிக அதிகமாக உள்ளதால், சர்வதேச சுகாதார அவசரநிலையை அறிவித்து உலக சுகாதார அமைப்பு தற்பொழுது போர்க்கால நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
