புதிய வகை எபோலா 'பன்டிபூகியோ' வேகம்... இந்தியர்களுக்கு மத்திய அரசு பயணக் கட்டுப்பாடுகள்!

 
எபோலா எபோலா

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் தற்பொழுது 'பன்டிபூகியோ'   என்ற புதிய வகை எபோலா வைரஸ் நோய் மிக  வேகத்தில் பரவி வருகிறது. மிக அதிக அளவிலான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்த கொடிய வைரஸ் தொற்றுக்கு, தற்போதைய மருத்துவ உலகில் எந்தவித பிரத்தியேக தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ கண்டறியப்படவில்லை என்பது சாமானிய உலக மக்களிடையே மாபெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எபேலோ

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் பரவலைச் சர்வதேச அளவிலான பொதுச் சுகாதார அவசரநிலையாக   அதிரடியாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தற்பொழுது அவசரப் பயண வழிகாட்டுதல் ஒன்றை நாடு முழுவதும் வெளியிட்டுள்ளது.இதன்படி, எபோலா வைரஸின் வீரியம் அதிகமாக உள்ள காங்கோ, உகாண்டா மற்றும் அதன் அண்டை நாடான தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு இந்தியக் குடிமக்கள் யாரும் தற்போதைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது.

எபேலோ

மேலும், ஏற்கனவே அந்த ஆப்பிரிக்க நாடுகளில் தங்கியிருக்கும் இந்தியர்கள் அனைவரும் உள்ளூர் சுகாதாரத் துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்பொழுது வரை யாருக்கும் இந்த புதிய வகை எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பன்னாட்டு விமான நிலையங்களில் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் போர்க்கால அடிப்படையில் பலப்படுத்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.