காதல் திருமணம் எதிரொலி... மணமகனின் தந்தையைக் கடத்தித் தாக்கிய 4 பேர் கைது!

 
தாக்குதல் காதல் திருமணம்

கேரள மாநிலம் கொல்லம் அருகே காதல் திருமணம் தொடர்பாக இளைஞரின் தந்தையைக் கடத்தித் தாக்கிய வழக்கில் 4 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் கடத்தப்பட்ட ஜானி என்பவர் காவல்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ள ஓயூர் பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இலமடு, கொட்டாய்க்காவிலா பகுதியைச் சேர்ந்தவர் ஜானி (59). இவரது மகனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இரு குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் இக்காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.

சவூதி அரேபியாவில் வசிக்கும் மணமகளின் உறவினரான ஆதர்ஷ் என்பவருக்கும், மணமகனுக்கும் இடையே ஏற்கனவே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சொந்த ஊருக்குத் திரும்பிய ஆதர்ஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜானியின் வீட்டிற்குத் தேடிச் சென்றுள்ளார். அங்கு அவரது மகன் இல்லாததால், தனியாக இருந்த ஜானியை மிரட்டிவிட்டு அக்கும்பல் திரும்பிச் சென்றது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

அதே நாள் இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் ஜானியின் வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கும்பல், அவரை சரமாரியாகத் தாக்கியதோடு பலவந்தமாக ஒரு காரில் ஏட்டிக் கடத்திச் சென்றது. மேலும், ஓடும் காரிலும் அவரைத் தொடர்ந்து தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பூயப்பள்ளி காவல்துறையினர் உடனடியாக உஷாராகித் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகள் பயணித்த காரை மறித்த காவல்துறையினர், படுகாயமடைந்த நிலையிலிருந்த ஜானியைப் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் கடக்கல் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன், விஷ்ணு, ஆசிஃப் மற்றும் பெண்ணின் உறவினரான ஆதர்ஷ் ஆகிய 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும், இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.