ஓணம் எதிரொலி.. விமான கட்டணம் மூன்று மடங்கு எகிறியது!

 
துபாய் விமான நிலையம்

கேரள மக்களில் அதிகமானோர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். நம்மூர் பொங்கல், தீபாவளியைப் போன்றே கேரளாவின் மிகப் பெரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகள் விமான கட்டண உயர்வால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் இருந்து கேரளம் மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கடைசி நேரத்தில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் மிகுந்த அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

விமானம் விமான இருக்கை ஹேர் ஹோஸ்டஸ்

சென்னை-கொச்சி வழித்தடத்தில் வழக்கமாக 5,336 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது அந்த கட்டணம் 14,843 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வழக்கமாக 5,853 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இன்று அது 14,700 ரூபாயாக அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதே போன்று இந்த ஓணம் சமயத்தில் துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசிய உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கேரளத்திற்குச் செல்லும் விமானங்களிலும் கட்டணங்கள் அதிகளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான

பண்டிகையைக் கொண்டாட கேரளம் செல்லும் பயணிகள், திடீரென இந்தக் கட்டண உயர்வைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாத நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வேலை நிமித்தமாக இருப்பவர்கள் இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டண உயர்வை கட்டுப்படுத்த விமான போக்குவரத்து துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.