தேர்தல் எதிரொலி.. தமிழத்தில் ரயில் நிலையங்களில் கடும் சோதனை.. 5 பேர் கொண்ட தனிப்படை - பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், ரயில்கள் வழியாகப் பணம் மற்றும் தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு முக்கிய ரயில்வே காவல் நிலையத்திலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் (SI) தலைமையில் 5 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தனிப்படையினர் ரயில்களில் ரகசியமாகவும், நேரடியாகவும் சோதனைகளை மேற்கொள்வார்கள். குறிப்பாக, நீண்ட தூர விரைவு ரயில்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ரயில்கள் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

திருச்சி ரயில்வே காவல் மாவட்டத்தில் இந்தப் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்குள்ள முக்கிய சந்திப்புகளில் (Jn) பயணிகளின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்பட்டு, சந்தேகம் ஏற்படும் நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலைய நடைமேடைகள் மட்டுமின்றி, ஓடும் ரயில்களுக்குள்ளும் இந்தச் சோதனைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீவிரக் கண்காணிப்பின் பலனாக, கடந்த மார்ச் 25 அன்று சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.09 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைப் பறிமுதல் செய்து ரயில்வே தனிப்படை போலீசார் அதிரடி காட்டியுள்ளனர். இதேபோல், கோவை மற்றும் ஈரோடு வழியாகச் செல்லும் ரயில்களிலும் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்:
பயணிகள் ரயில்களில் பயணம் செய்யும்போது ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணத்தையோ அல்லது அதிக மதிப்பிலான புதிய நகைகளையோ கொண்டு சென்றால், அதற்கான உரிய வங்கி ஆவணங்கள் அல்லது ரசீதுகளைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
