ஆகஸ்ட் 12 ம் தேதி அரிதான முழு சூரிய கிரகணம்... இந்தியாவில் காண முடியுமா?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு கடந்து செல்லும்போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழும் இயற்கை நிகழ்வே முழு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி அரிதான முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த நிகழ்வை உலகளவில் உள்ள பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களில் நேரலை செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

இந்த முழு சூரிய கிரகண நிகழ்வானது மொத்தம் சுமார் 4 மணி 23 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அட்லாண்டிக் பெருங்கடல், போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் ரஷியாவின் வடபகுதியில் வாழும் மக்கள், சூரியனை நிலவு முழுமையாக மறைக்கும் அற்புதக் காட்சியைக் காண முடியும். அதேபோல அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இந்த நிகழ்வு பகுதி கிரகணமாகத் தெரியும்.

இந்திய நேரப்படி வருகிற ஆகஸ்ட் 12-ந்தேதி இரவில் இந்த முழு சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து இதனை நேரடியாகக் காண முடியாது. இருப்பினும் நாசா விண்வெளி மையம் செய்யும் இணையதள நேரலை மூலமாக இந்திய மக்கள் அனைவரும் இந்த நிகழ்வைக் கண்டு ரசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நேரடியாகத் தெரியாவிட்டாலும், இணையவழி நேரலை வசதி செய்யப்பட்டுள்ளதால் வானியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
