வானில் அரங்கேறிய அதிசய முழு சூரிய கிரகணம்... வைரலாகும் புகைப்படங்கள்!
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்பட்டு பகல் நேரத்திலேயே வானம் இருண்டு மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும். முழு சூரிய கிரகணத்தின் போது சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போல் காட்சியளிப்பது இந்த வானியல் நிகழ்வின் சிறப்பம்சமாகும். விண்ணில் நிகழும் இது போன்ற வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் நேற்று உலகெங்கும் பல பகுதிகளில் நிகழ்ந்துள்ளது.
இந்த அரிய நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் வானியல் ஆர்வலர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்துள்ளனர். ரஷ்யாவில் உள்ளூர் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு சந்திரன் முதன்முதலில் சூரியனை மறைத்த போது அதன் வெளிப்புற ஒளிவட்டத்தின் ஒளி மட்டுமே எஞ்சியிருந்தது. ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜாவிக் நகரில் நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை சுற்றுலாப் பயணிகள் உட்பட எண்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் சூரியன் மறையும் நேரத்தில் கிரகணம் நிகழ்ந்ததால் கிரகணத்துடன் கூடிய சூரிய அஸ்தமனத்தை காணும் அரிய வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்தது. குறிப்பாக ஸ்பெயினில் இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ்ந்த இந்த முழு சூரிய கிரகணத்தைக் கண்டு மக்கள் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். இயற்கையின் இந்த விசித்திரமான அழகை நேரில் கண்டுகளித்த மக்கள் அதனை தங்களது நினைவாகப் பதிவு செய்துகொண்டனர்.
