2036-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் - மூலதன முதலீட்டை அதிகரிக்க பரிந்துரை!

 
வளர்ச்சி ஜிடிபி பொருளாதாரம் இந்தியா வளர்ச்சி ஜிடிபி பொருளாதாரம் இந்தியா

தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய நிதிநிலை வெள்ளை அறிக்கையில், வரும் 2036-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரத்தை 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த இலக்கை எட்ட தற்போதைய உள்கட்டமைப்பு மற்றும் மூலதன முதலீடுகளைப் பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் மூலதனச் செலவினங்களில், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் பின்தங்கியுள்ளதாக வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நடப்பு 2025-26 நிதி ஆண்டில் தமிழகத்தின் மூலதனச் செலவினம் ரூ.50,911 கோடியாக உள்ளது. இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி.) வெறும் 1.44 சதவீதம் மட்டுமே ஆகும்.

உற்பத்தி மதிப்பில் குஜராத் மாநிலம் 2.86 சதவீதமும், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் தலா 1.92 சதவீதமும் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்குகின்றன.

அமைச்சர் மரிய வில்சன் நிதியமைச்சர்

ஒட்டுமொத்த அரசு செலவினத்தில் மூலதன முதலீட்டின் பங்கு தமிழகத்தில் 11.8 சதவீதமாக மட்டுமே உள்ளது. ஆனால், இது குஜராத்தில் 26.8 சதவீதமாகவும், கர்நாடகாவில் 17 சதவீதமாகவும், மகாராஷ்டிராவில் 13 சதவீதமாகவும் மிக வலுவாக உள்ளது.

மூலதன முதலீடுகள் என்பவை வெறும் செலவினங்கள் அல்ல, அவை மாநிலத்தின் நீண்டகால சொத்து உருவாக்கத்திற்கான அடித்தளம் என வெள்ளை அறிக்கை விவரித்துள்ளது.

குறிப்பாகப் புதிய சாலைகள், மேம்பாலங்கள், அதிநவீனத் துறைமுகங்கள் மற்றும் தொழில் பூங்காக்கள் அமைத்தல், குடிநீர் திட்டங்களை விரிவுபடுத்துதல், கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகளை உலகத் தரத்திற்கு உயர்த்துதல் போன்ற துறைகளில் முதலீடுகள் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.. இத்தகைய உள்கட்டமைப்பு முதலீடுகள் மட்டுமே மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தொழில் முதலீடுகளை ஈர்த்து, ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியை அதிகரிக்க உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் மரிய வில்சன்

நிர்ணயிக்கப்பட்ட 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரப் பாதையை நோக்கித் தமிழகம் துரிதமாக நகர வேண்டும் எனில், அரசு தனது நிதி மேலாண்மையில் சில அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என வெள்ளை அறிக்கை பரிந்துரைத்துள்ளது:

தேவையற்ற அன்றாட நிர்வாக மற்றும் வருவாய்ச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க வேண்டும். வருவாய்ச் செலவுகளில் மிச்சப்படுத்தப்படும் தொகையை, நீண்டகாலப் பயன்தரும் மூலதன முதலீடுகளுக்குப் போர்க்கால அடிப்படையில் திருப்பி விட வேண்டும். மாநிலத்தின் கடன் சுமை மற்றும் வட்டிச் செலுத்துதல் அதிகரித்து வரும் வேளையில், பொருளாதாரத்தை மேம்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த நிதிச் சீர்திருத்தங்கள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.