சடலத்துடன் மக்கள் திடீர் சாலை மறியல்... இசிஆர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

 
maRiyal maRiyal

விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டக்குப்பம் கிராமத்தில் உயிரிழந்த முதியவர் பூமிலிங்கத்தின் உடலை வழக்கமான இடுகாட்டில் அடக்கம் செய்ய உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது அங்கு படகுகளை நிறுத்தி வைத்திருந்த நடுக்குப்பம் மீனவர்கள் சிலர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துக் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பயங்கர மோதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உள்பட ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த கொடூரத் தாக்குதலால் ஆத்திரமடைந்த பெரிய கோட்டக்குப்பம் பகுதி பொதுமக்கள், முதியவரின் சடலத்தை நடுரோட்டில் வைத்து கோட்டக்குப்பம் ரவுண்டானா இசிஆர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் புதுச்சேரி மற்றும் சென்னை இடையே இரு மார்க்கங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் சரக டிஐஜி அருளரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சடலத்தை தற்போதைய இடுகாட்டிலேயே பாதுகாப்பாக அடக்கம் செய்ய உரிய ஏற்பாடு செய்து தருவதாகப் போலீசார் உறுதியளித்ததை ஏற்று, 2 மணி நேரத்திற்குப் பின் மக்கள் மறியலைக் கைவிட்டனர்.