வீணா விஜயன் லாக்கரில் அமலாக்கத்துறை திடீர் சோதனை - கேரள அரசியலில் பரபரப்பு!

 
வீணா விஜயன்

கேரள மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள சிஎம்ஆர்எல் தாது மணல் நிறுவன முறைகேடு வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கொச்சியில் உள்ள தனியார் தாது மணல் நிறுவனமான சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து, வீணா விஜயனின் 'எக்ஸாலஜிக்' மென்பொருள் நிறுவனம் எவ்விதச் சேவைகளும் வழங்காமல் முறைகேடாக 2.78 கோடி ரூபாய் பெற்றதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறையும், மத்திய அரசின் தீவிர மோசடி விசாரணை அலுவலகமும்இணைந்து கூட்டு விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 17-ஆம் தேதியன்று வீணா விஜயனை நேரில் வரவழைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரிடம் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையான வினாக்களை எழுப்பி தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், வீணா விஜயன் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அவருக்குச் சொந்தமாக உள்ள வங்கி லாக்கரைமுடக்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள், நேற்று அங்கு அதிரடிச் சோதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தச் சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து விபரங்கள் ஏதேனும் சிக்கியதா என்பது குறித்த விபரங்களை அமலாக்கத்துறை தற்பொழுது வரை ரகசியமாக வைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் மகள் வீட்டில் விசாரணை நடந்த அடுத்த சில நாட்களிலேயே, வங்கி லாக்கரிலும் சோதனை நடத்தப்பட்டிருப்பது கேரள அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.