தற்கொலை செய்துகொண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரனின் குடும்பத்திற்கு ரூ.55 லட்சம் நிதியுதவி - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

 
அதிமுக அதிமுக

உள்கட்சிப் பிளவுகளால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் பூக்கடை மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்திற்கு ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மகேந்திரனின் மறைவு அதிமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த நிதியுதவி பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக் கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியாக ரூ.30 லட்சம் நேரடியாக அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இபிஎஸ் எடப்பாடி அஞ்சலி

இது தவிர, மகேந்திரன் பணியாற்றிய தஞ்சை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அமைப்பு சார்பாக தனியாக ரூ.25 லட்சம் நிதியுதவி திரட்டி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி, தற்கொலை செய்துகொண்ட மகேந்திரனின் குழந்தையின் எதிர்கால முழுப் படிப்பிற்கான செலவுகளையும் அதிமுக இயக்கமே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரு பிரிவுகளாக உடைந்த அ.தி.மு.க-வில், 4 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைந்ததால் கடுமையான அரசியல் நெருக்கடி நீடித்து வந்தது.

எடப்பாடி அஞ்சலி

சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோரைத் தவிர மற்ற எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் எடப்பாடியுட்ன இணக்கமாகியுள்ள சூழலில், கட்சியின் ஒற்றுமைக்காகத் தன்னுயிரை விட்ட எளிய தொண்டனின் கடைசி ஆசையை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், இந்த நிதியுதவியையும் அறிவித்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.