அதிமுக அமைப்புச் செயலாளராக செஞ்சி ஏழுமலை நியமனம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

 
செஞ்சி ஏழுமலை

அதிமுக புதிய அமைப்புச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி V. ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் உட்கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரணி மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்பியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செஞ்சி ஏழுமலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுகவில் தீவிரமாகப் பணியாற்றி வந்த மூத்த தலைவர்களில் ஒருவராவார். எனினும், கடந்த 2021-ஆம் ஆண்டு கட்சி தலைமைக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம்  தலைமையிலான 'அதிமுக உரிமை மீட்புக் குழுவில்' இணைந்து, விழுப்புரம் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வந்தார்.

ஓபிஎஸ் தரப்பின் நகர்வுகள் மாறுபட்ட நிலையை எட்டியதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் செஞ்சி ஏழுமலை மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தாய் கழகத்தில் இணைந்தார். மீண்டும் கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே, அவரது நீண்டகால அரசியல் அனுபவத்தையும் களப்பணியையும் கருத்தில் கொண்டு, அவருக்குக் கட்சியின் மிக முக்கியப் பொறுப்பான அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள வட மாவட்ட அதிமுக தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.