"மிட்டாய் கொடுத்து தூக்கிச் செல்வது போல்” - தவெக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!

 
எடப்பாடி பழனிசாமி

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைச் சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றித் தூக்கிச் செல்வது போலத் தவெக அரசு தன் பக்கம் அழைத்துச் சென்றுள்ளது என அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை வளைக்கும் நடவடிக்கைகளை விமர்சித்த அவர், விளையாடும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஆசை காட்டி அழைத்துச் செல்வது போலத் தவெக அரசு செயல்பட்டுள்ளதாகக் கூறினார்.

எடப்பாடிவிஜய் எடப்பாடி

தவெக அரசு பதவியேற்றது முதல் மக்கள் நலனுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்றும், மக்கள் பிரச்சனைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

வரவிருக்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களைக் குறிப்பிட்ட அவர், அந்தத் தொகுதிகளின் எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கள் தங்களின் சுயநலத்திற்காகவே பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்று கடுமையாக விமர்சித்தார்.