"கூட்டணி என்பது அந்தந்த கட்சித் தலைவர்களின் விருப்பம்” - எடப்பாடி பழனிசாமி
திமுக கூட்டணியில் பிரேமலதா இணைந்தது குறித்த கேள்விக்கு, கூட்டணி அமைப்பது என்பது அந்தந்த கட்சித் தலைவர்களின் விருப்பம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் நிதி நிலைமை குறித்துப் பேசிய அவர், "ரகுராம் ராஜன் தலைமையிலான குழு கண்ணை மூடிக்கொண்டு கடன் வாங்க மட்டும் யோசனை தெரிவித்ததா? அந்தச் பொருளாதார ஆலோசனைக் குழு அளித்த ஆலோசனைகள் என்ன என்பது குறித்துத் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு வருவாய் பற்றாக்குறை உயர்ந்துள்ளது. இதைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதே ஒரு ஆக்கப்பூர்வமான அரசின் கடமையாகும்" எனத் தெரிவித்தார்.

"சட்டமன்றத் தேர்தல் உஷ்ணத்தைத் தவிர்க்கவே தற்போது மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாயைத் ஸ்டாலின் அரசு கொடுத்துள்ளது" என்று குற்றம் சாட்டினார். நீட் தேர்வு ரத்து, 5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம் எனத் திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்னானது? ஆட்சிக்கு வந்து ஒரு உருப்படியான திட்டத்தைக் கூடத் திமுக நிறைவேற்றவில்லை" எனச் சீறினார்.
திமுக அரசு அதிமுகவின் திட்டங்கள் மீது சவாரி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், "கிராமம் முதல் நகரம் வரை தரமான தார்ச் சாலைகளை அமைத்துக் கொடுத்தது அதிமுக அரசுதான். கஜா புயல் முதல் கொரோனா காலம் வரை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, கொரோனாவைத் தடுப்பதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியது அதிமுக அரசுதான். உங்கள் சாதனைகளைக் கூறி வாக்குக் கேளுங்கள், அப்படி ஏதும் இல்லையா? சரி, உங்கள் தோல்விக்கு வாழ்த்துகள்" எனக் கிண்டலாகப் பேசினார்.
தவெக மற்றும் பிற கட்சிகளுடனான கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "கூட்டணி அமைப்பது என்பது அந்தந்த கட்சித் தலைவர்களின் விருப்பம்" என்று மிகச் சுருக்கமாகப் பதிலளித்தார்.
