"மத்திய அரசு தரும் நிதியை மறைக்கிறார் ஸ்டாலின்" - பிரதமர் முன்னிலையில் எடப்பாடி ஆவேசம்!

 
எடப்பாடி

மதுரை மண்டேலா நகரில் இன்று மாலை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசினார். 

பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் மத்திய அரசுடனான மோதல் போக்கு குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

மோடி

"உலக நாடுகள் மெச்சும் அளவிற்குத் தரமான ஆட்சியைப் பிரதமர் மோடி நடத்தி வருகிறார். அவர் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு ஒட்டுமொத்த இந்திய தேசமே அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது". "தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் தாராளமாக நிதி ஒதுக்குகிறார். ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்" எனக் குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி தனது உரையில், "அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தோம். ஆனால், திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட வரவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளைத் திட்டமிட்டு திமுக அரசு முடக்கப் பார்க்கிறது. அதன் மீது வீண்பழி சுமத்தி அரசியலில் ஆதாயம் தேடுகின்றனர். திமுக கூட்டணி இன்னும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தையே தொடங்கவில்லை. ஆனால், NDA கூட்டணித் தொண்டர்கள் 234 தொகுதிகளிலும் தேனீக்களைப் போலவும், எறும்புகளைப் போலவும் இப்போதே களப்பணியைத் தொடங்கிவிட்டனர்."

தென்மாவட்டங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதாகத் தெரிவித்த அவர், ஊழல் நிறைந்த திமுக அரசை அகற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது எனத் தொண்டர்களிடையே முழக்கமிட்டார். மதுரையின் அடையாளமான மீனாட்சி அம்மனை வணங்கித் தனது உரையைத் தொடங்கிய அவர், வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என உறுதிபடத் தெரிவித்தார்.