"மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும்" - எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

 
காவிரி மேகதாது எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி எச்சரித்துள்ளார்.

இன்று ஜூலை 31ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபாட்டு வருகிறது. அந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீரின் அளவு முழுமையாகத் தடுக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும்."

மேகதாது

"காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கிய பிறகும், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய அளவு தண்ணீரைத் திறப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டு விவசாயிகள் வாதாடியும், வீதியில் இறங்கிப் போராடியும் தான் காவிரி நீரைப் பெற வேண்டிய அவலநிலை நீடித்து வருகிறது" என அவர் குற்றம் சாட்டினார்.

மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியைத் தடுக்கவும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி சட்டப்பூர்வ மற்றும் அரசியல்ரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.