முதலிடத்தில் எடப்பாடி பழனிசாமி.. திருப்பத்தூரில் 1 ஓட்டில் அதிசயம்.. அதிக மற்றும் குறைந்த வாக்கு வித்தியாச லிஸ்ட்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசங்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தேர்தலில் மாநிலத்திலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய சாதனை படைத்துள்ளார். அதே நேரத்தில், வெறும் 1 ஓட்டு வித்தியாசத்தில் ஒரு அமைச்சரே தோல்வியடைந்த விசித்திரமான நிகழ்வும் தமிழக தேர்தல் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

எடப்பாநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமாரை 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசுர பலத்தை நிரூபித்துள்ளார். தொகுதி மக்களிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கை இந்த இமாலய வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது. அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டாலும், எடப்பாடி பழனிசாமியின் இந்தத் தனிப்பட்ட வெற்றி அரசியல் வட்டாரங்களில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

மற்றொரு புறம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அரிதான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு போட்டியிட்ட திமுக அமைச்சர் பெரியகருப்பன், தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதியிடம் வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் கிடைத்த இந்த 1 ஓட்டு வெற்றி, தவெக தொண்டர்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தியுள்ளது. அதிக மற்றும் குறைந்த வாக்கு வித்தியாசங்களின் பட்டியல் இதோ உங்களின் பார்வைக்கு.
