"தேர்தல் முடிஞ்சதும் எடப்பாடி கவர்னர் ஆகிவிடுவார்" - கனிமொழி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த கனிமொழி எம்பி, அதிமுக மற்றும் பாஜக இடையிலான உறவைச் சாடிப் பேசினார்.
பிரசாரத்தின் போது பேசிய கனிமொழி, "இந்தத் தேர்தல் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் இருக்க மாட்டார். அவர் ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படுவார். பாஜக-வுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு இதுதான் பரிசாகக் கிடைக்கும்" என்று விமர்சித்தார்.

அதிமுக-வும் பாஜக-வும் பிரிந்து இருப்பதாகக் கூறினாலும், உண்மையில் அவர்கள் ஒரே அணியாகவே செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
மத்திய பாஜக அரசு சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்தபோது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூடக் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று கனிமொழி சுட்டிக்காட்டினார். "உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களுக்குத் துணை போய்விட்டு, இப்போது வாக்கு கேட்டு வருவது வேடிக்கையாக உள்ளது" என்றும் அவர் பேசினார்.

மதுரை மாவட்டத்தில் திமுக-வின் செல்வாக்கை நிலைநிறுத்த கனிமொழி போன்ற முன்னணித் தலைவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அவரது இந்தப் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி பாஜக-வின் கரம் பிடித்துத் தான் அரசியலில் நீடிக்கிறார் என்ற திமுக-வின் தொடர் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபடுமா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும்.
