அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத் துறையின் மனு தள்ளுபடி!
முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றத்திலிருந்து மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.07 கோடி சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இவ்வழக்கு தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதனிடையே, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தனியாகப் புகார் மனு அளித்த அமலாக்கத் துறை, தூத்துக்குடியில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கையும் மதுரைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.
தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனுவை விசாரித்தது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை முடிந்து இறுதி வாதம் தொடங்கவுள்ள நிலையில், வழக்கை இப்போது மாற்ற முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வழக்குத் தொடர அரசிடம் முறையான அனுமதி பெறப்படவில்லை என்பதையும், அமலாக்கத் துறையின் வழக்கு இன்னும் முழுமையாக விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
