மாணவர்களுக்குப் பிணையில்லா கல்விக் கடன் -அமைச்சர் அறிவிப்பு!
பொறியியல், பல்வகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எவ்வித சிரமமும் இன்றி பிணையில்லா கல்விக் கடன் பெறுவதை உறுதி செய்யத் தமிழக அரசு மிக முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த ஜூலை 6-ஆம் தேதி, முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற உயர்கல்வித் துறை ஆய்வுக் கூட்டத்தில் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் எந்தவொரு மாணவரும் தனது உயர்கல்வியைப் பாதியிலேயே நிறுத்திவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருந்தது. அதன் தொடர்ச்சியாகவே, தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பிணையில்லா கல்விக் கடன் வழங்குவதை வேகப்படுத்தத் திட்டமிடப்பட்டது.
மாணவர்கள் வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைவதற்காகப் புதிய ஏற்பாட்டைத் தமிழக உயர்கல்வித் துறை இன்று அறிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் கல்விக் கடன் வழங்கும் பணிகளைத் தீவிரப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உதவிப் பேராசிரியர் தகுதியில் ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவர் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சேவையினை மாணவர்கள் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலருக்கும் தனித்தனியாகப் பிரத்தியேக அலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்குச் சரியாக வழிகாட்ட ஏதுவாக, இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு முன்னனி வங்கிகளின் உயர் அதிகாரிகள் மூலம் கல்விக் கடன் நடைமுறைகள் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கல்விக் கடன் பெற விரும்பும் மாணவர்கள் தங்களது மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலரைத் தொடர்புகொண்டால், அவர்கள் கடன் பெறத் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் விவரங்களை மாணவர்களுக்கு விளக்குவார்கள்.
மேலும், அவர்கள் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரைத் தொடர்புகொண்டு மாணவர்களுக்கும், வங்கிகளுக்கும் இடையே ஒரு வலுவான இணைப்புப் பாலமாகச் செயல்படுவார்கள். இந்த புதிய நடைமுறையில் மாவட்ட ஆட்சியரின் பங்கும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சேர்க்கை வழிகாட்டல் மையத்தின் பொறுப்பு அலுவலருடன் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர் இணைந்து பணியாற்றுவார்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்களது மாவட்டங்களில் உள்ள வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பு அதிகாரிகள் மற்றும் இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்துவார்கள். இதன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் கடன் வழங்கப்பட்ட விவரங்கள் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டு, தகுதியான மாணவர்களுக்குக் கடன் விரைவாகக் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
நடப்பு நிதியாண்டில் மாணவர்களுக்கு ரூ. 3,000 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு, 7.5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் கல்விக் கடன் தொகையை மேலும் உயர்த்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்று அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
