கல்வி உதவித்தொகை பெற மாணவிகளின் விவரங்களை உடனடியா பதிவிடுங்க... தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு!
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உரிய கல்வி உதவித்தொகைகளைப் பெறுவதற்காக, EMIS இணையதளப் பக்கத்தில் தகவல்களை உடனடியாகப் பதிவிட வேண்டும் எனப் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வி உதவித்தொகை செலுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், அனைத்து அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் இது தொடர்பான முக்கியச் சுற்றறிக்கை ஒன்று முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தகுதியான மாணவர்கள் விடுபடாத வகையில் விபரங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் உதவித்தொகை கோரும் பணிகளில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.மாணவர்களின் அடையாள அட்டை விவரங்கள், வங்கிக் கணக்கு எண்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் மற்றும் சாதிச் சான்றிதழ் தகவல்களைத் துல்லியமாகப் பதிவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள சான்றிதழ் விவரங்களைச் சரிபார்த்து முறையாகப் பதிவிட்டால் மட்டுமே மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு உதவித்தொகை நேரடியாகச் சென்று சேரும். வங்கிக் கணக்கு விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் உதவித்தொகை நேரடியாக வரவு வைப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் கவனமாகச் செயல்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசு வழங்கும் நிதியுதவிகள் உரிய நேரத்தில் மாணவர்களைச் சென்றடைவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.தலைமை ஆசிரியர்கள் இந்தப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து அனைத்து மாணவர்களின் விவரங்களையும் விரைந்து பதிவேற்றம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இந்தச் சுற்றறிக்கையைத் தொடர்ந்து அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இதற்கான தரவுப் பதிவேற்றப் பணிகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகை எவ்விதத் தடையுமின்றி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
