ஈழப் போரின் வலிகளை கவிதைகளில் பதிவு செய்தவர்… கவிஞர் சேரன் காலமானார்

 
சோரன்

 

ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான சேரன், உடல்நலக் குறைவு காரணமாக கனடாவின் டொரான்டோ நகரில் காலமானார். அவருக்கு வயது 66.இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் அளவெட்டியில் 1960-ம் ஆண்டு பிறந்தவர் சேரன். கவிஞர் உருத்திரமூர்த்தியின் மகனான இவர், 1980-களில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கங்களையும், ஈழத் தமிழர்களின் வாழ்வியலையும் தனது கவிதைகள், கட்டுரைகள் மூலம் பதிவு செய்தவர்.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஈழத்துக் கவிஞர் சேரன் புதன்கிழமை (நவம்பர் 18) கனடாவில் இயற்கை எய்தினார்.

கடந்த நவம்பர் 18-ம் தேதி இரவு அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகம், ஈரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர், உயிரிழப்பதற்கு முன்பு ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக அவரது நண்பர் கனடா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 உலகப் புகழ்பெற்ற ஈழத்து நவீன தமிழ்க் கவிஞர் சேரன் கனடாவில் காலமானார் - Vanakkam London

தமிழில் 8 கவிதைத் தொகுப்புகளையும், 4 கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். அவரது கவிதைகள் ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கவிஞர் முருகையனுடன் இணைந்து 1985-ம் ஆண்டு தொகுத்த 'மரணத்துள் வாழ்வோம்' கவிதைத் தொகுப்பு குறிப்பிடத்தக்க படைப்பாகும்.

கனடாவில் யோர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற சேரன், வின்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறை பேராசிரியராகப் பணியாற்றினார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது