இன்று மாலை முதல் அமல்.. டாஸ்மாக் பார்களை மூட நிர்வாகம் உத்தரவு... தமிழகம் முழுவதும் பரபரப்பு!

 
மனமகிழ் மன்றம் மது பார்

தமிழகக் குடிமகன்கள் மற்றும் டாஸ்மாக் பார் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் பார்களை உடனடியாக மூடுமாறு டாஸ்மாக் மாநில நிர்வாகம் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதலே, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சிக் காலத்தில் ஏலம் விடப்பட்டு, செயல்பட்டு வந்த பெரும்பாலான டாஸ்மாக் பார்களுக்கான சட்டபூர்வ உரிமம் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தக் காலம் நேற்றுடன் முழுமையாக நிறைவடைந்தது.

புதிய டெண்டர்கள் விடப்பட்டு, பார்களுக்கான புதிய உரிமங்கள் முறைப்படி வழங்கப்படும் வரை, இன்று மாலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து பார்களையும் மூடி சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உரிமம் காலாவதியான பின்னரும் சட்டவிரோதமாகப் பார்களைத் திறந்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் எனக் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபான பார்

உரிமம் இல்லாத பார்களில் மது அருந்த அனுமதிப்பது மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பார் உரிமையாளர்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைப் பணியாளர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று மாலை முதல் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பார்கள் மூடப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்கத் தனிப்படை போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர்.

ஏற்கனவே கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த சுமார் 717 டாஸ்மாக் கடைகளை தவெக அரசு  மூடியிருந்த சூழலில், உரிமம் காலாவதியான பார்களை மூட உத்தரவிட்டுள்ளது மதுப்பிரியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், புதிய டெண்டர் நடைமுறைகள் விரைவில் தொடங்கப்பட்டு, புதிய பார்களுக்கான உரிமங்கள் முறைப்படி ஒதுக்கப்படும் எனத் துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.