இன்று முதல் அமலுக்கு வந்தது... கோவில்பட்டி கடலைமிட்டாய் விலை 25% உயர்வு!

 
கடலை மிட்டாய்

உலகப் புகழ்பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாயின் விலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இன்று முதல் 25 சதவீதம் உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை முதல் புதிய விலை அமலுக்கு வந்தது.

கோவில்பட்டி கரிசல் மண்ணில் விளைவிக்கப்படும் நிலக்கடலைக்குத் தனி இனிப்புச் சுவை உண்டு. தற்போது இதன் விலை அதிகரித்துள்ளதோடு, வெல்லம், ஏலக்காய் மற்றும் பேக்கிங் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

கடலை மிட்டாய்

மூலப்பொருட்களின் தொடர் விலை ஏற்றத்தால் உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரித்து உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நிலவரத்தைக் கருத்தில் கொண்டு கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்கம் ஆலோசித்து விலையை 25% உயர்த்த முடிவு செய்துள்ளது.

கடலை மிட்டாய்

அதன்படி, இன்று முதல் ஒரு கிலோ கடலைமிட்டாய் ₹220-லிருந்து ₹270 வரை உயர்ந்துள்ளது. தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ ₹220 முதல் ₹320 வரை விற்பனை செய்யப்படுகிறது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோவில்பட்டி கடலைமிட்டாயின் இந்தத் திடீர் விலை உயர்வு பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.