நாளை முதல் அமலுக்கு வருகிறது... ஒரே மாதத்தில் 2வது முறையாக ஏர் இந்தியா விமான கட்டணம் உயர்வு!

 
ஏர் இந்தியா விமானம் ஏர் இந்தியா விமானம்

சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, ஏர் இந்தியா நிறுவனம் தனது பயணக் கட்டணங்களை மீண்டும் அதிரடியாக உயர்த்தியுள்ளது. கடந்த ஒரு மாத கால இடைவெளியில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது உயர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கட்டண மாற்றத்தின்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏர் இந்தியா

இந்தியாவுக்குள்ளான விமானப் பயணங்களுக்கு அடிப்படை கட்டணத்தில் இருந்து ரூ.899 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கு 280 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23,300) வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துள்ளதால், இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என ஏர் இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோடை விடுமுறை தொடங்கவுள்ள நிலையில், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகள் இப்போது கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏர் இந்தியா விமானம்

அடிக்கடி உயர்ந்து வரும் இந்தக் கட்டண உயர்வால், அவசரத் தேவைகளுக்காகவும், வேலை நிமித்தமாகவும் விமானப் பயணம் மேற்கொள்ளும் நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த கவலையடைந்துள்ளனர். மற்ற தனியார் விமான நிறுவனங்களும் ஏர் இந்தியாவைப் பின்பற்றித் தங்களது கட்டணங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளை (ஏப்ரல் 8) முதல் இந்தப் புதிய கட்டண உயர்வு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்தப் பாதிப்பு இருக்காது என்றாலும், இனி முன்பதிவு செய்பவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.