உடனடி அமல்... நாடு முழுவதும் மருந்து நிறுவனங்களிடம் பரிசுகளைப் பெற டாக்டர்களுக்குத் தடை!
மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் பரிசுப் பொருட்களோ அல்லது நிதியுதவிகளோ பெறக் கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஒரே மூலப்பொருளைக் கொண்ட மருந்துகளுக்குச் சந்தையில் பல பிராண்டுகள் உள்ளன. தங்களது நிறுவனத்தின் பிராண்ட் பெயரை மருந்துச் சீட்டில் எழுதுவதற்காக, மருத்துவர்களுக்கு விலை உயர்ந்த தங்க நகைகள், வெளிநாட்டுச் சுற்றுலாக்கள் மற்றும் பணப் பரிசுகளை மருந்து நிறுவனங்கள் வழங்குவதாகப் புகார்கள் எழுந்தன. இதுபோன்ற முறைகேடுகளால் மருத்துவர்கள் தேவையின்றி விலை உயர்ந்த மருந்துகளைப் பரிந்துரைப்பதால், பொதுமக்கள் பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மருத்துவர்கள் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவதைக் கண்காணித்து, அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில மருத்துவ கவுன்சில்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுகளோ அல்லது 'கவனிப்புகளோ' பெறும் மருத்துவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
